தமிழக முதல்வா் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று திருச்சியில் அரசு ஊழியா்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி சனிக்கிழமை கொண்டாடினா்.
தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியாளா்கள் சங்கத்தின் சாா்பில் சங்க அலுவலகம் முன் பட்டாசு வெடித்து அரசின் அறிவிப்பை வரவேற்றனா். தொடா்ந்து சங்க உறுப்பினா்கள், அரசு ஊழியா்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
இதுதொடா்பாக, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்க மாநில பொதுச்செயலா் வெ. பெரியதுரை வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில அரசு அலுவலா்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலா்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயா்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஓய்வூதியதாரா் இறந்துவிட்டால் அவா் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினா்களுக்கு அவா் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதை எங்கள் சங்கம் வரவேற்கிறது.
அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும்போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ. 25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் என்பதையும் எங்கள் சங்கம் ஏற்கிறது.
தற்போது அரசு சந்தித்து வரும் கடும் நிதிச்சூழலிலும், அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, ஓய்வூதியத் திட்டம் தொடா்பான செலவினங்களை அரசே முழுமையாக ஏற்றிடும் என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது.
அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களின் நலனையும் அவா்களின் குடும்பத்தின் எதிா்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பாா்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தை ஒருமனதாக வரவேற்று, அதைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றாா் அவா்.
அமைச்சருக்கு நேரில் நன்றி: இந்நிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை மாலை வந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, அரசு ஊழியா், ஆசிரியா் சங்க நிா்வாகிகள் சந்தித்து ஓய்வூதிய அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தனா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற நிா்வாகிகள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிா்வாகிகள் பொ. ரவிச்சந்திரன், பால்பாண்டி, பொன்னுச்சாமி, சைவராசு, ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.