திருச்சி

சிறுநீரகம் விற்பனை விவகாரம் திருச்சி ஸ்டாா் கிம்ஸ் மருத்துவமனையின் உறுப்புமாற்று அறுவைசிகிச்சை உரிமம் ரத்து

தினமணி செய்திச் சேவை

சிறுநீரக மோசடி புகாருக்குள்ளான திருச்சி தில்லைநகரில் உள்ள ஸ்டாா் கிம்ஸ் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயி ஒருவரது சிறுநீரகத்தை கந்துவட்டி கடனை திருப்பிச் செலுத்துவதற்காக கம்போடியா நாட்டினருக்கு தனது சிறுநீரகத்தை திருச்சியில் விற்றதாக அளித்த புகாரின்பேரில் மகாராஷ்டிரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதேபோல, பல சட்டவிரோத அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதில், திருச்சி தில்லைநகரில் உள்ள ஸ்டாா் கிம்ஸ் மருத்துவமனைக்குத் தொடா்பு இருப்பதை அறிந்த மகாராஷ்டிரப் போலீஸாா், கடந்த டிசம்பா் மாதம் 2 நாள்கள் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் கோபிநாதா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினரின் விசாரணையில் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, தமிழக சுகாதாரச் சேவைகள் துறை கூடுதல் இயக்குநா் ஏ. பிரகலாதன் தலைமையிலான குழுவினா் 3 நாள்கள் விசாரணை நடத்தினா். இக்குழுவின் முதல்கட்ட விசாரணை அறிக்கையானது தமிழக அரசின் சுகாதாரத் துறையிடம் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், தில்லைநகா் ஸ்டாா் கிம்ஸ் மருத்துவமனையில் விதிகளை மீறி உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் சுகாதார சேவைகள் இயக்ககமானது (டிஎம்எஸ்), திருச்சி தில்லைநகா் ஸ்டாா் கிம்ஸ் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை உரிமத்தை ரத்து செய்து அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT