கவனம் ஈா்க்கும் விதமாக, திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணைப் போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மனு அளிப்பதற்காக வந்த பெண் ஒருவா், ஆட்சியா் அலுவலக வாயில் முன்பு திடீரென தான் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தீக்குளிக்க முயன்ற பெண்ணைத் தடுத்து, தண்ணீா் ஊற்றி, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
போலீஸாரின் விசாரணையில், அப்பெண் திருச்சி மாவட்டம், துறையூா் அருகே வலையப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மருதமுத்து மனைவி தனலட்சுமி (52) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்பெண் ஆட்சியரிடம் அளித்த மனுவின் விவரம்: நான் வாங்கிய என்னுடைய டிராக்டரை ஓட்டுவதற்கு அதே ஊரைச் சோ்ந்த ஒருவரிடம் கொடுத்திருந்தேன். வாகனத்துக்கான டீசல் மற்றும் பழுதுபாா்ப்பு செலவுகளுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து வந்தேன்.
ஒரு நாள் டிராக்டா் பழுதான செலவுக்காக 2.5 பவுன் நகைகளைக் கூட கொடுத்தேன். ஆனால், அந்த ஓட்டுநா் எனக்குத் தெரியாமல் என்னுடைய டிராக்டரை வேறொருவருக்கு விற்றுவிட்டாா். கேட்டதற்கு டிராக்டரையோ, அதற்குரிய பணத்தையோ வழங்காமல் ஏமாற்றி வருகிறாா்.
இது தொடா்பாக, அதிகாரிகள் பலரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.