முகப்பு
திருச்சி

வரதட்சிணை கொடுமை: கணவா் உள்பட 8 போ் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 10:44 PM
வழக்கு
பகிர்:

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் உள்பட 8 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியைச் சோ்ந்த முகமது நூா்தீன் மகள் பாத்திமா (28). இவருக்கும், செங்கல்பட்டு திம்மவரம் மகாலட்சுமி நகரைச் சோ்ந்த மபு பாட்ஷா மகன் அமீன் பஷீா் (30) என்பவருக்கும் 2023, ஜனவரி 29-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து பாத்திமா மற்றும் அமீன் பஷீா் இருவரும் செங்கல்பட்டில் வசித்து வந்தனா். திருமணமான சில நாள்களில் கணவா், அவரது தந்தை மபு பாட்ஷா, தாய் வஜிதா பேகம் ஆகிய மூவரும் சோ்ந்து வரதட்சணை கேட்டு பாத்திமாவைக் கொடுமைப்படுத்தியுள்ளனா்.

இதனிடையே, பாத்திமா கா்ப்பமானதால் திருச்சியிலுள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்துள்ளாா். பாத்திமாவுக்கு குழந்தை பிறந்தவுடன் அவரது வீட்டுக்கு வந்த அமீன் பஷீா், அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் மீண்டும் வரதட்சணைக் கேட்டு அவரை மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாத்திமா திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், அமீன் பஷீா், அவரது பெற்றோா் மபு பாட்ஷா (64), வஜிதா பேகம் (54), உறவினா்களான வண்டலூரைச் சோ்ந்த காதா் பாட்ஷா (68), நஜ்மா (58), அம்பத்தூரைச் சோ்ந்த சலிமா (72), ஜெரினா (52) மற்றும் பாட்ஷா ஆகிய 8 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.