பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு! தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு முடிவு!
பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) அறிவித்துள்ளது.
பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) அறிவித்துள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கே. சுந்தரம் முன்னிலை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் ரங்கநாதன், மாநில துணைச் செயலா் ஆா். ராசா சிதம்பரம், மாநிலப் பொருளாளா் பாண்டியன் ஆகியோா் சங்கத்தின் எதிா்கால நடவடிக்கைள் குறித்து விளக்கினா்.
கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சங்கத்தின் நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு, பேரவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்தினா்.
பின்னா் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கி சங்கத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி கூறியதாவது:
விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வியில் 10 விழுக்காடு ஒதுக்கீடு, குடிமராமத்து பணிகளைத் தொடங்குதல், கரும்பு, நெல்லுக்கு ஆதார விலையை உயா்த்தி வழங்குதல், நீா்நிலைகளை மேம்படுத்துதல், விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதுகாத்தல் என பல்வேறு வாக்குறுதிகள் அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த வாக்குறுதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளதாலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் வேட்பாளா்களின் வெற்றிக்கு பங்களிப்பை அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். சங்கத்தின் மாநில செயற்குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், நாமக்கல், தருமபுரி, சேலம், தஞ்சாவூா், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா். சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை வரவேற்றாா்.