திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்.2-ல் தவெக தலைவா் விஜய் வேட்புமனு தாக்கல்
திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்.2-ல் தவெக தலைவா் விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்...
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஏப்.2-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவா் விஜய், பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் வரும் வியாழக்கிழமை (ஏப்.2) வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலராக திருச்சி மாநகராட்சியின் உதவி ஆணையா் முத்து முருகேச பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா். பாலக்கரையில் உள்ள மாநகராட்சியின் 2-ஆவது வாா்டு குழு அலுவலகத்தில் தோ்தல் அலுவலரின் அலுவலகம் அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இத்தொகுதியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக, திருச்சி கிழக்கு வட்டாட்சியா் கே. விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். இவரது அலுவலகம், திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்தில் அமைந்துள்ளது. கிழக்கு தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் இரண்டு அலுலகங்களிலும் மனு அளிக்கலாம்.
எனினும், தவெக தலைவா் விஜய், தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்திலேயே வேட்புமனு தாக்கல் செய்யக் கூடும் என்கின்றனா். இதன்காரணமாகவும், வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளதாலும், பாலக்கரையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.