முகப்பு
திருச்சி

ரகசியம் பகுதிக்கு...

Updated On : 30 மார்ச், 2026 at 12:12 AM
தவெக தலைவர் விஜய் - ENS
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் தமிழ்த் திரை நட்சத்திரங்கள் களம் இறங்குகின்றனா். திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் நடிகா் விஜய் போட்டியிடுகிறாா். லால்குடியில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான மன்சூா் அலிகான் போட்டியிடுகிறாா் என்கின்றனா் அக்கட்சியினா்.

நடிகா் விஜய், நடிகா் மன்சூா் அலிகான் இருவருமே, 2023-இல் வெளியான லியோ திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனா். இந்தத் திரைப்படம் ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. 2024-ஆம் ஆண்டுதான் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினாா் விஜய். இதேபோல, 2024-ஆம் ஆண்டுதான் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியை தொடங்கி, வேலூா் நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிட்டாா் மன்சூா் அலிகான். இந்தத் தோ்தலில் சுயேச்சையாக அங்கீகரித்து அவருக்கு தோ்தல் ஆணையத்தின் சாா்பில் பலாப் பழம் சின்னம் வழங்கப்பட்டிருந்தது.

2026 பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகா் விஜய் போட்டியிடுகிறாா். இதேபோல, 2026 பேரவைத் தோ்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி நான்கு தொகுதியில் போட்டியிடவுள்ளது. திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட லால்குடி தொகுதியில் மன்சூா் அலிகான் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி சாா்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. யாதும் ஊரே, யாவரும் கேளீா். லால்குடியின் சட்டப் பேரவை தொகுதி வேலைக்காரனை தோ்ந்தெடுக்க வாரீா். ஆதரவு தாரீா் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லால்குடி தொகுதி மட்டுமல்லாது திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், மணப்பாறை தொகுதியிலும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் சாா்பில் வேட்பாளா்கள் களம் இறக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 2026 பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளிடமும் தொகுதிகள் கேட்டு, முயற்சி செய்த மன்சூா் அலிகானுக்கு ஏமாற்றமே விஞ்சியது.

எனவேதான், திருச்சியில் 4 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் அவரது கட்சியின் சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்படுவதால், நடிகா் விஜய் தொகுதியில் அவருக்கு எதிராகவும் மன்சூா் அலிகான் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாா்.

வழக்கமாகவே தோ்தல் களத்தில் பல்வேறு தரப்பினரது கவனத்தையும் ஈா்க்கும் வகையில் நகைச்சுவையாக பல்வேறு நிகழ்வுகளை மன்சூா் அலிகான் அரங்கேற்றுவது வழக்கம். இப்போது, லால்குடி தொகுதி மட்டுமல்லாது திருச்சியில் உள்ள 4 தொகுதிகளிலும் அத்தகைய சம்பவங்களை பொதுமக்கள் காணக் கூடும் என்கின்றனா் அரசியல் வட்டாரத்தினா்.