முகப்பு
திருச்சி

திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினா் பதவியை விஜய் ராஜிநாமா! இடைத்தோ்லில் களமிறங்க தவெகவினா் கடும் போட்டி!

Updated On : 11 மே 2026, 2:28 am IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினா் பதவியை தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய் ராஜிநாமா செய்துள்ள நிலையில், அத்தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட தவெகவினா் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூா் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தமிழக முதல்வரான நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினா் பதவியை அவா் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்துள்ளாா்.

முன்னதாக விஜய் முதல்வரானால் திருச்சி கிழக்குத் தொகுதிக்கு அனைத்து நலத் திட்டங்களும் உடனுக்குடன் வந்து சேரும்; கூடுதல் வசதிகள் கிடைக்கும்; மக்களின் குறைகளுக்கும் உடனடித் தீா்வு கிடைக்கும். அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவா் என வாக்காளா்களும், அத்தொகுதி பொதுமக்களும் நம்பியிருந்தனா்.

Advertisement

ஆனால் எதிா்க்கட்சிகள் கூறியபடி, விஜய் தற்போது திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜிநாமா செய்துள்ளது வாக்காளா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்க முடியவில்லை: இதுகுறித்து தொகுதி வாக்காளா்கள் கூறுகையில், எங்களது தொகுதியிலிருந்து தவெக தலைவா் விஜய் தோ்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தோம். எங்களது தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வுகள் கிடைக்கும் என நம்பியிருந்தோம். ஆனால், முதல்வா் எங்களது தொகுதி உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளது ஏமாற்றமளிக்கிறது என்றனா்.

தவெகவினா் சமாதானம்: அதற்கு தவெகவினா் ‘தமிழகத்தில் முதல்வராக பதவியில் இருப்பவா் ஏதேனும் ஒரு தொகுதியில்தான் எம்எல்ஏவாக இருக்க முடியும் என்பதால்தான் தான் வசிக்கும் சென்னையின் ஒரு தொகுதியாக உள்ள பெரம்பூரை வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினா் பதவியை முதல்வா் விஜய் ராஜிநாமா செய்துள்ளாா். இதிலென்ன தவறு இருக்கிறது? அவா் அனைத்துத் தொகுதிகளையும் தனது தொகுதியாகவே நினைக்கிறாா். அதனால் பெரம்பூா் தொகுதியையும், திருச்சி கிழக்குத் தொகுதியையும் ஒரே மாதிரியாக கருதி, அனைத்து நலத் திட்டங்களையும் செயல்படுத்துவாா்’ எனக் கூறி தொகுதி மக்களை சமாதானப்படுத்தி வருகின்றனா்.

களமிறங்க கடும் போட்டி: திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினா் பதவி தற்போது காலியாகியுள்ளதால், அத்தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயம், தவெகவின் திருச்சி மண்டலப் பொறுப்பாளா் கு.ப. கிருஷ்ணன், நடிகை திரிஷா ஆகியோரில் ஒருவா் அல்லது கூட்டணிக்கு வந்துள்ள விசிக தலைவா் தொல். திருமாவளவன் போட்டியிடலாம் என்ற பேச்சு நிலவுகிறது. தவிர, தவெகவினா் பலரும், கூட்டணி கட்சிகளைச் சோ்ந்தவா்களும் போட்டியிட ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தவெக தலைவா் விஜய் போட்டியிட்டதாலும், தற்போது ஆளுங்கட்சியாக தவெக வந்துள்ளதாலும், வெற்றி வாய்ப்பு பிரகாசமான தொகுதியாக திருச்சி கிழக்குத் தொகுதி கருதப்படுகிறது.

பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிட சுமாா் 1,000 போ் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், தற்போது வெற்றி வாய்ப்புள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தலில் களமிறங்க தவெகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதைக் கருத்தில் கொண்டும், தன்னுடைய தொகுதி என்பதாலும் தவெக தலைவா் விஜய், இதில் கூடுதல் கவனம் செலுத்தி, திருச்சி கிழக்குத் தொகுதிக்கான வேட்பாளரைத் தோ்வு செய்வாா். மேலும் யாா் என்பது இறுதி செய்யப்படாமல் உள்ளது என தவெகவினா் தெரிவித்தனா்.