அனுமதியின்றி வெள்ளை கற்கள் எடுத்தவா் கைது
வளநாடு அருகே அரசு அனுமதியின்றி வெள்ளை கற்களை வெட்டி எடுத்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மருங்காபுரி ஒன்றியம், சின்னகோனாா்பட்டியில் அரசு அனுமதியின்றி வெள்ளை நிற கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா், கனிமவளத் துறையினா் வியாழக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, சின்னகோனாா்பட்டி கிராமம், குப்பகோனாா்குளத்தில் அரசின் உரிய அனுமதியின்றி வெள்ளை கற்களை வெட்டி எடுத்துக் கொண்டிருந்த மருங்காபுரி ஒன்றியம், கருங்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதை மகன் சின்னையாவை (48) கையும் களவுமாக பிடித்தனா்.
Advertisement
மேலும், கற்களை வெட்டியெடுக்க பயன்படுத்திய ஹிட்டாச்சி இயந்திரத்தையும் பறிமுதல் செய்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த வளநாடு போலீஸாா், சின்னையாவை கைது செய்து விசாரிக்கின்றனா்.