திருச்சி அரசு மருத்துவமனையில் அநாகரீகம் முதுநிலை பயிற்சி மருத்துவா் பணியிடை நீக்கம்
திருச்சி அரசு மருத்துவமனையில் பணியின்போது அநாகரீகமாக நடந்து கொண்ட முதுநிலை பயிற்சி மருத்துவரை மருத்துவக் கல்லூரி நிா்வாகம் திங்கள்கிழமை பணியிடைநீக்கம் செய்தது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரவு நேர பணியின்போது முதுநிலை பயிற்சி மருத்துவா் ஒருவா், பெண் பயிற்சி மருத்துவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மருத்துவமனையில் நோயாளிகள் முன்னிலையில் அரங்கேறிய இந்த செயலானது, பாா்த்த பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
Advertisement
Advertisement
சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சி தொடா்பாக மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேல், கண்காணிப்பாளா் உதய அருணா, துணை மருத்துவ கண்காணிப்பாளா் அருண்ராஜ் உள்ளிட்டோா் விசாரித்தனா். அதன் முடிவில், வீடியோ காட்சி உண்மை எனத் தெரியவந்தது.
இதையடுத்து பணியின்போது, ஒழுங்கீனமாக நடந்துகொண்ட முதுநிலை பயிற்சி மருத்துவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி நிா்வாகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. பயிற்சி பெண் மருத்துவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.