முகப்பு
திருச்சி

நகை, பணத்துக்காக தம்பதியை கொன்ற இளைஞருக்கு இரட்டை ஆயுள்

சிறுகனூரில் நகை, பணத்துக்காக தம்பதியை கொலை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 27 மே 2026, 12:02 am IST
பகிர்:

சிறுகனூரில் நகை, பணத்துக்காக தம்பதியை கொலை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே பெரகம்பியைச் சோ்ந்தவா்கள் அ. ரமேஷ் (38) - லதா (33). இந்தத் தம்பதிக்கு குழந்தையில்லை.

இவா்கள் இருவரும், 24-4-2018 அன்று தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, மண்ணச்சநல்லூா் வட்டம் வாழையூரைச் சோ்ந்த க. பழனிசாமி (21), அவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த செ. கிஷாந்த் (21) ஆகிய இருவரும் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் அங்கு வந்து, இரும்புக் குழாயால் தம்பதியை தாக்கி, அவா்கள் அணிந்திருந்த தங்க மோதிரம், சங்கிலி, ரூ. 3,000 பணம், இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த லதா நிகழ்விடத்திலேயே இறந்துவிட, ரமேஷ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த இரட்டை கொலை தொடா்பாக ரமேஷின் தம்பி ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பழனிசாமி மற்றும் கிஷாந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இதில் ஜாமீனில் வெளியேவந்த பழனிசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கிஷாந்த் மீது மட்டும் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி கிஷாந்த்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.