முகப்பு
அரியலூர்

"பெண்சிசுக் கொலையை தடுக்க வேண்டும்'

பெண்சிசுக் கொலையை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்புத் தேவை என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

பெண்சிசுக் கொலையை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்புத் தேவை என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நகராட்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு மனித சங்கிலியை வியாழக்கிழமை தொடக்கி வைத்த அவர் மேலும் பேசியது:  குழந்தைகள் ஜாதி, மதம், மொழி, சொத்து, நிறம், பிறப்பு உள்ளிட்டவற்றால் எவ்வித வேறுபாடும் இன்றி 18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் ஆவர். குழந்தைகள் ஆரோக்கியமாக உயிர் வாழ மற்றும் நல்ல உடல், மன வளர்ச்சி பெற்று தனித்தன்மையுடன் வளர குழந்தைகள் பாதுகாக்கப்படுவது குழந்தை பாதுகாப்பு ஆகும். இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவர் 24-ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் 6 வயது முதல் 18 வயது வரை 1,07516 ஆண் குழந்தைகளும், 1,03,785 பெண் குழந்தைகளும் உள்ளனர். பெண் பிள்ளைகளை சுமையாக நினைத்து கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 1 கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து பெண் குழந்தைகள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கவும், குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு சட்டப்பூர்வமாக பாதுகாப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும்,நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.  இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, வருவாய்க் கோட்டாட்சியர் கணபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர் செல்வராஜ், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் அரியலூர் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், வட்டாட்சியர்கள் முருகன், தண்டபாணி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.