அரியலூர்

எஸ்.டி. பிரிவில் சாதிச் சான்றிதழ் வேண்டும்: பல ஆண்டுகளாகப் போராடும் மலைக்குறவர்கள்

அரியலூர் மாவட்ட மலைக்குறவர்கள் எஸ்.டி. பிரிவின் கீழ் சாதிச் சான்றிதழ் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.

சி.சண்முகவேல்

அரியலூர் மாவட்ட மலைக்குறவர்கள் எஸ்.டி. பிரிவின் கீழ் சாதிச் சான்றிதழ் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலானிக்குடிகாடு, பாப்பாக்குடி,செந்துறை,சாத்தம்பாடி,திருக்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைக்குறவர்களின் வாரிசுகளுக்கு கல்வி நிறுவனங்கள் அளிக்கும் மாற்றுச் சான்றிதழில் மலைக்குறவர் (எஸ்.டி) இனம் என்றே உள்ளது.
ஆனால், இந்தச் சான்றை வைத்து,எஸ்.டி. பிரிவில் சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் அது செல்லாது எனக் கூறி சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் அருகிலுள்ள கடலூர் மாவட்டத்தில்கூட மலைக்குறவர் (எஸ்.டி) பிரிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று மலைக்குறவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து திருகளப்பூர் மலைக்குறவர் முருகன் கூறியது:
நான் கடந்த 1990 முதல் எஸ்.டி. பிரிவில் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருகிறேன். ஆனால் மாவட்ட நிர்வாகமோ எஸ்.டி. பிரிவில் வழங்க முடியாது. எம்.பி.சி., பி.சி. பிரிவில்தான் வழங்க முடியும் என்கிறது. இதே கடலூர் மாவட்டத்தில் எங்களது உறவினர்களெல்லாம் எஸ்.டி. பிரிவில் சான்றிதழ் வாங்கியுள்ளார்கள். இங்கே மட்டும்தான் இந்த நிலைமை.  இதனால் எனக்குக் கிடைத்த ராணுவ வேலையும் கிடைக்காமல் போனது. தற்போது காட்டு விலங்கினங்களை வேட்டையாடிப் பிழைத்து வருகிறேன்.
அப்போதே எனக்கு எஸ்.டி. பிரிவில் சான்றிதழ் கொடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இந்த பிரச்னை எங்களது பிள்ளைகளுக்கும் தொடரக் கூடாது என்பதற்காகவே போராடி வருகிறேன். இதுபோல 1,500 குடும்பங்கள் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள் என்றார் அவர்.
மேலனிகுடிக்காடு பார்வதி கூறியது: நான் 9 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். எஸ்.டி. பிரிவில் சாதிச் சான்றிதழ் இல்லாததால் மேலும் படிக்க இயலவில்லை. இருந்திருந்தால் கண்டிப்பாக மேற்படிப்பு படித்து நல்ல வேலைக்குச் சென்றிருப்பேன். தற்போது மூங்கில் கூடை பின்னும் தொழில் செய்கிறேன். இந்த நிலைமை தொடரக்கூடாது என்பதற்காகவே போராடுகிறோம் என்றார் அவர்.
இதுகுறித்து ஜயங்கொண்டம் வட்டாட்சியர் திருமாறனிடம் கேட்டபோது, அரியலூர் மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சில மலைக்குறவர் குடும்பங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 1,500 குடும்பங்கள் உள்ளன. ஆனால் அவர்களுக்கு எஸ்.டி. பிரிவின்கீழ் சாதிச் சான்றிதழ் வழங்க முடியாத நிலை உள்ளது.
மலையும் அதைச் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தால் மட்டுமே எஸ்.டி. பிரிவில் சான்றிதழ் வழங்க இயலும். அரியலூர் மாவட்டத்தில் மலைகளே கிடையாது என்பதால் எம்.பி.சி.,பி.சி. பிரிவில்தான் சான்றிதழ் வழங்க முடியும் என்றார்.
அரசு உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வட்டாட்சியர் கூறியதுபோல ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி கெஜட் உள்ளது. அதன்படிதான் சாதிச் சான்றிதழ் வழங்க முடியும். உதாரணத்துக்கு ஆந்திரத்திலுள்ள ரெட்டியார் சமூகத்திலேயே குண்டா ரெட்டி சமூகத்துக்கு எஸ்.டி. பெயரில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதே தமிழகத்தில் மாவட்டத்தைப் பொறுத்து அவர்களுக்கு எம்.பி.சி., பி.சி.,பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்தப் பகுதிகளில் மலைக்குறவர்கள் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என ஆய்வு செய்து, அவர்களுக்கு எஸ்.டி. பிரிவின்கீழ் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என அரசுக்குப் பரிந்துரைத்தால் கண்டிப்பாக  சான்றிதழ் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT