ஆர்டிஓ அலுவலகத்தில் குவியும் பெண்கள்
தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால் பழகுநர் உரிமம் பெற அரியலூர் வ
தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால் பழகுநர் உரிமம் பெற அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
மானிய விலையில் கிடைப்பதால் வேலைக்கு செல்லும் பெண்கள் எப்படியாவது இருசக்கர வாகனம் வாங்கிவிட ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பல பெண்களுக்கு வாகனம் ஓட்ட தெரிந்தும் ஓட்டுநர் உரிமம் இல்லை.இன்னும் பலருக்கோ இருசக்கர வாகனங்கள் ஓட்டவே தெரியாது. இதுவரை அரசுப் பேருந்தை நம்பியிருந்த இவர்கள், தற்போது பேருந்துக் கட்டண உயர்வால் இரு சக்கர வாகனங்களுக்கு மாற விரும்புகின்றனர். கூடுதலாக, அரசு மானியம் வேறு இவர்களை இருசக்கர வாகனம் பக்கம் ஈர்த்து வருகிறது.
இதனால் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்து உரிமமில்லாத பெண்கள் உடனடியாக உரிமம் பெறும் முயற்சியில் இறங்கினர்.
அதுபோல வாகனம் ஓட்ட தெரியாத பெண்கள் வேகமாக ஓட்டுநர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் பல மைதானங்களில் தற்போது பெண்கள் இருசக்கர வாகன ஓட்டி பயிற்சி பெறுவதைக் காணலாம்.
அது போல விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால், உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் குவிந்து வருகின்றனர்.
அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலத்தில் வழக்கமாக ஒரு சில பெண்கள் உட்பட 100 முதல் 150 பேர் வரை தினமும் வருவர். ஆனால் தற்போது தினமும் 300 பேர் வரை பெண்கள் குவிந்து வருகின்றனர். இது போல வருமான சான்றிதழ் பெற கூட்டுறவு வங்கிகள் மற்றும் இ-சேவை மையங்களில் காத்து கிடக்கும் பெண்களையும் பார்க்க முடிகிறது.