முகப்பு
அரியலூர்

வேட்புமனுக்கள் தள்ளுபடி:  வேட்பாளர்கள் உண்ணாவிரதம் 

ஜயங்கொண்டம் அருகே இலையூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனுக்கள் தள்ளுபடியானதையடுத்து வேட்பாளர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 7:04 AM
பகிர்:

ஜயங்கொண்டம் அருகே இலையூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனுக்கள் தள்ளுபடியானதையடுத்து வேட்பாளர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் தேர்தல் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜயங்கொண்டம் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவைப்படும் 7 உறுப்பினர்களின் மனுக்களைத் தவிர, இதர வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும்,  7 பேர் உறுப்பினரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாகவும் அந்தந்த தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். இதையடுத்து, தேர்தல் அலுவலர்களிடம்  வேட்புமனு தாக்கல் செய்தோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  
இதில், ஆத்திரமடைந்த வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் ஜயங்கொண்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஜயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு 20 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதில்,13 பேருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மனு தாக்கல் செய்தவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தொடர்ந்து, புதன்கிழமை கூட்டுறவு சங்கத்தின் முன்பு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் கென்னடி மற்றும் போலீஸார், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.