வேளாண் விளைபொருள் மதிப்பு கூட்டு இயந்திர மையம் அமைக்க மானியம்
அரியலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி விவசாய இயக்கத்தின் கீழ் வேளாண் விளைபொருள்கள் மதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி விவசாய இயக்கத்தின் கீழ் வேளாண் விளைபொருள்கள் மதிப்பு கூட்டு இயந்திர மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் நிலத்தடி மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2016 முதல் 2020 வரையில் 1,000 ஹெக்டேர் கொண்ட மானாவாரி நிலத் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் ரூ.802.90 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் 2017-2018 ஆம் நிதியாண்டில் மானாவாரி தொகுப்புகளில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களை சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல், விற்பனைக்கேற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் கொள்முதல் மற்றும் பணி மூலதனத்திற்கான மொத்தத் தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அத்தொகையை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
மீதம் உள்ள 25 சதவீதத் தொகை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக்குழுவின் பங்களிப்பாக செலுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 2 ஆம் கட்டமாக 150 மதிப்பு கூட்டு இயந்திர மையங்களை அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 3 மதிப்பு கூட்டு இயந்திர மையங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மதிப்பு கூட்டும் இயந்திர மையம் அமைக்க ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உழவர் உற்பத்தியாளர் குழு விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு குழுவிடம் வழங்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, அரியலூர் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.