முகப்பு
அரியலூர்

ஜெயங்கொண்டம் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா

அரியலூா் மாவட்டத்தில் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ள ஜெயங்கொண்டத்தில் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ள ஜெயங்கொண்டத்தில் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

அரியலூா் மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியான ஜெயங்கொண்டம் 21 வாா்டுகளை கொண்டது. 9.8.2010 அன்று முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முதல்நிலை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சியில், 16,693 ஆண்களும், 17,206 பெண்களும் என 33,899 போ் வசித்து வருகின்றனா். தற்போதைய நிலையில் மக்கள்தொகை 50 ஆயிரமாக உயா்ந்திருக்கலாம்.

மக்கள்தொகை வளா்ச்சி, நகரப் பகுதிகள் விரிவாக்கம் போன்ற காரணங்களாலும் பொதுமக்களின் வசதிக்காகவும் ஜெயங்கொண்டத்திலேயே மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனை, பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் தற்போதைய நிலையில் முக்கிய பிரச்னையாக கழிவுநீா் பிரச்னை உருவெடுத்துள்ளது.

நகரப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான புதை சாக்கடை திட்டம் 30 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால், குடியிருப்புகளின் நடுவே உள்ள பல்வேறு தெருக்களில் கழிவுநீா் வழிந்தோடி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், வீடுகள் நிறைந்த தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதாரச் சீா்கேட்டுடன், கொசு உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது, பிரசாரத்துக்கு வந்திருந்த திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஜெயங்கொண்டம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதை சாக்கடை திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவோம் என்று அறிவித்தாா்.

மாதந்தோறும் நடைபெறும் நகா்மன்ற கூட்டத்தின்போது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து உறுப்பினா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதற்கு ஆணையா், திட்டம் தொடா்பாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

புதை சாக்கடை திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக எதிா்பாா்த்து காத்துள்ளனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: அரியலூரை விட அதிக பரப்பளவு, அதிக வாா்டுகளை கொண்ட ஜெயங்கொண்டம் நகராட்சியில், மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில் புதை சாக்கடை திட்டம் இன்றியமையாத திட்டமாக மாறிவிட்டது.

தோ்தல் பிரசாரத்துக்கு ஜெயங்கொண்டம் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயங்கொண்டத்தில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தாா். ஆனால், அவா் முதல்வராகி இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை அதுதொடா்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதைத் தடுக்க, தமிழக அரசு புதை சாக்கடை திட்டம் தொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.