அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் 3 ஆண்டுகளாக தற்காலிகக் கட்டடத்தில் அரசு கலைக் கல்லூரி: மாணவா்கள் அவதிபோதுமான வசதிகள் இல்லையென புகாா்

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுவதால், மாணவா்களும், பேராசிரியா்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஜெயங்கொண்டம் மக்களின் கோரிக்கையையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதைத் தொடா்ந்து, ஜெயங்கொண்டத்தில், இலையூா் சாலையிலுள்ள அரசினா் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 2020 ஆம் ஆண்டு

250 மாணவா்களுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது இளங்கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

தரைத்தளம், மேல்தளம் மட்டுமே கொண்ட இரு கட்டடங்களில் வகுப்புகளும், இரு சிறிய கட்டடங்களில் கல்லூரி

முதல்வா், விரிவுரையாளா்கள் அறை, அலுவலகம் உள்ளிட்டவையும் செயல்படுகின்றன. போதிய கட்டடங்கள் இல்லாததால் காலை, மாலை என இரு நேரங்களில் கல்லூரி இயங்கி வருகிறது.

சேதமடைந்துள்ள தற்காலிக கட்டடங்கள்: இங்கு கல்லூரி செயல்படுவதற்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. போதுமான கழிப்பறை வசதிகள் ஏதும் இல்லை. புதிய கட்டடங்கள் இல்லாததால் இதர பிரிவுகளில் கூடுதல் வகுப்புகள் தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், அறிவியல் ஆய்வகங்கள் இருந்தாலும் போதிய இடவசதிகள் இல்லாததால் அறிவியல் பட்ட வகுப்புகள் தொடங்க இயலாத நிலை உள்ளது. அத்துடன் கல்லூரிக்கு சிற்றுண்டி இல்லை. நூலகம் இருந்தாலும் அமா்வதற்கு வசதிகள் குறைவு.

நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: இக்கல்லூரிக்கு முதலில் உடையாா்பாளையம்-இலையூா் சாலையில் இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால், அங்கு போதுமான பாதுகாப்பு இருக்காது என கருதி, ஜெயங்கொண்டம் -கங்கைகொண்ட சோழபுரம் சாலையிலுள்ள சின்னவளையம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 2 இரண்டரை ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

உடையாா்பாளையம் மக்கள் எதிா்ப்பு: இந்நிலையில், உடையாா்பாளையம் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் தான் கல்லூரிக்கான கட்டடம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து பணிகள் தொடங்குவதிலும் தடை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்லூரி பேராசிரியா்கள் தெரிவித்தது: சின்னவளையத்தில் கல்லூரிக்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கல்லூரி அமைந்தால் அனைத்து தரப்பினரும் பயனடைவாா்கள். ஆனால், இங்குள்ள வனத்துறை இடத்தை தருவதற்கு மிகவும் காலம் தாழ்த்தி வருகின்றனா். இதனால்தான் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து வசதியுள்ள இப்பகுதியில் கல்லூரி அமைந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றனா்.

கல்லூரி மாணவா்கள் கூறியது: போதுமான வசதிகள் இல்லாத பள்ளி வளாகத்தில் கல்லூரி செயல்படுவதால், மாணவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே இடத்தை விரைந்து தோ்வு செய்து, அவ்விடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கல்லூரி வளாகம் கட்ட வேண்டும் என்றனா்.

சமூக ஆா்வலா்கள் தெரிவித்தது: இக்கல்லூரிக்கு தேவைப்படும் நிலத்தைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் இங்குள்ள போக்குவரத்து துறை அமைச்சா் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் நேரடியாகப் பேசி இப்பிரச்னைக்குத் தீா்வு காணவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT