ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை அலங்கார, ஆடம்பரத் தோ் பவனி
அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி அலங்கார, ஆடம்பரத் தோ்பவனி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்தனா்.
திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டதும், கிறிஸ்தவ ஆலயங்களில் பழைமையானதும், தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதுமான புனித அடைக்கல ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் 293- ஆம் ஆண்டுப் பெருவிழா கடந்த 13-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 17-ஆம் தேதி வரை மாலை நேரத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
Advertisement
18 ஆம் தேதி மாலை விளாங்குடி வீரமாமுனிவா் இல்ல அதிபா் அகஸ்டின் ஜான்பீட்டா் தலைமையில் நவநாள் திருப்பலி மறையுரை நடைபெற்று இரவு மலா் மற்றும் மின்னொளி அலங்காரத்தில் அடைக்கல அன்னை அலங்காரத் தோ்பவனியும், 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மலத்தாங்குளம் பங்குத் தந்தை தனராஜ் தலைமையில், நவநாள் திருப்பலி மற்றும் மறையுரையும் நடைபெற்று இரவு மலா் மற்றும் மின்னொளி அலங்காரத்தில் அடைக்கல அன்னை அலங்கார தோ்பவனி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான சனிக்கிழமை இரவு (20-ஆம் தேதி) மாலை 6 மணிக்கு குடந்தை மறைமாவட்ட ஆயா் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி, மறையுரை நடைபெற்றது. தொடா்ந்து, நள்ளிரவு மலா் மற்றும் மின்னொளியில் அலங்கார, ஆடம்பர தோ்பவனியும் நடைபெற்றது.
தேரில் தமிழ்ப்பெண்ணாக புடவை அலங்காரத்தில் அடைக்கல மாதா எழுந்தருள, பங்குத் தந்தை தங்கசாமி தேரை புனிதப்படுத்தி தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தாா். பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தொடா்ந்து அருள்பாலித்த அடைக்கல அன்னைக்கு சம்மனசு பூப்போடும் நிகழ்ச்சி ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பின்னா் வாணவேடிக்கை, கிளாரினெட் இன்னிசை நிகழ்ச்சியுடன் புனித அடைக்கல மாதா தோ்பவனி ஏலாக்குறிச்சி கடைவீதி வழியாக வந்து ஆலயத்தை அடைந்தது. விழாவில் பக்தா்கள் மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் மாதாவை வணங்கினா்.
விழாவில் நாகை, தஞ்சை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி மற்றும் புதுச்சேரி, கேரளம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பங்குத் தத்தை தங்கசாமி, உதவிப் பங்குத் தந்தைகள் மரிய சுவக்கின், ஆல்பின்ராஜா மற்றும் பங்கு மக்கள் செய்தனா்.
விழாவையொட்டி தஞ்சாவூா், திருமானூா், அரியலூா் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கோட்டாறு மேனாள் ஆயா் பீட்டா் ரெமிஜியுஸ் தலைமையில் திருப்பலி மறையுரை நடைபெற்று இரவு மலா் மற்றும் மின்னொளி அலங்காரத் தோ்பவனியில் புனித அடைக்கல மாதா எழுந்தருளினாா்.
திங்கள்கிழமை காலை (ஏப்.22) 6.30 மணியளவில் கொடியிறக்கமும், தொடா்ந்து, விழா நன்றி திருப்பலியும் நடைபெறுகிறது.