முகப்பு
அரியலூர்

அரியலூரில் பயனற்ற நிலையில் சுகாதார வளாகங்கள்... கேள்விக்குறியாகும் தூய்மை இந்தியா திட்டம்

அரியலூா் நகராட்சி பகுதிகளில் சுகாதார வளாகங்கள் செயல்படாத நிலையில், தூய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:41 PM
அரியலூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையிலுள்ள பூக்கடை மாரியம்மன் கோயில் அருகே பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்.
பகிர்:

அரியலூா் நகராட்சி பகுதிகளில் சுகாதார வளாகங்கள் செயல்படாத நிலையில், தூய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.

18 வாா்டுகளைக் கொண்ட அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட சில தெருக்களில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இதில், வண்ணாங்குட்டை பிள்ளையாா்கோயில் தெரு, பூக்கடை மாரியம்மன் கோயில் தெரு, சித்தெரி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார வளாகங்கள் செயல்படாத நிலையில் உள்ளது.

ஒவ்வொரு வீடுகளிலும் தனிநபா் கழிப்பறை அவசியம் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கி மானியங்கள் வழங்கப்பட்டு கழிப்பறைகளை கட்ட ஊக்கப்படுத்தி வருகின்றனா்.

ஆனால் நகராட்சி சாா்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் பல சேதமடைந்து பராமரிக்கப்படாமல் பூட்டி வைத்துள்ளனா். இதேபோல் தண்ணீா் பிரச்னை மற்றும் கழிவு நீா் செல்ல முறையான வழியின்றி அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் தினந்தோறும் அரியலூா் நகருக்கு பணி நிமித்தமாக வரும் பல ஆயிரம் மக்கள் சுகாதார வளாகங்கள் இன்றி தவிக்கின்றனா். மேலும் இயற்கை உபாதைகளுக்கு சித்தேரி, அய்யப்பனேரி உள்ளிட்ட நீா் நிலைகளை பயன்படுத்தும் சூழல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

எனவே, துாய்மை இந்தியா திட்டத்தை முறைப்படுத்த சுகாதார வளாகங்களை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரியலூா் நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.