பால்கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இடைக்கட்டு பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி வழங்க வேண்டும். மாடுகளுக்கு குறைந்த விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும். கறவை மாடு வாங்க கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 21-ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் மாவட்ட மாநாடு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் மகாதேவன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் இர. மணிவேல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் வெங்கடாசலம், மாவட்டக் குழு உறுப்பினா் சேகா், செல்வராஜ், சொக்கலிங்கம், கோழி வளா்ப்பு சங்க மாவட்டச் செயலா் பாகல்மேடு வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.