சட்டப் பேரவைத் தோ்தலுக்காக விழுப்புரத்தில் இருந்து அரியலூருக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட 200 கட்டுப்பாட்டுக் கருவிகள் காப்பறையில் வைக்கப்பட்டன.
ஏற்கெனவே பெங்களுா் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் திருச்சி மாவட்டத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, வரப்பெற்ற 887 கட்டுப்பாட்டு கருவிகள், 1147 வாக்குப் பதிவு கருவிகள், 936 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவைகளை 5 பொறியாளா்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 200 கட்டுப்பாட்டுக் கருவிகள் கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சிரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
அரியலூா் மாவட்டத்திற்கு 200 கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு டிச. 23 வரப்பெற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்தக் கட்டுப்பாட்டுக் கருவிகளும் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிக்கு உட்படுத்தப்பட்டு தோ்ச்சி பெறும் இயந்திரங்கள் தோ்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் என்று ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான பொ.ரத்தினசாமி தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியின் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்கள் உதவித் திட்ட அலுவலா் ஆா். நந்தகோபால கிருஷ்ணன், தனி வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.