அரியலூா் மாவட்டத்திலுள்ள சமூக நீதி கல்லூரி விடுதிகளில் அண்மையில் நடைபெற்ற களமாடு மற்றும் கலைக்கொண்டாட்டம் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பதக்கங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் மூலம் சமூக நீதி கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் படைப்பு, கலை மற்றும் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தந்தை பெரியாரின் பிறந்த நாளான ‘சமூக நீதி தினம்‘ 17.09.2025 அன்று களமாடு மற்றும் கலைக்கொண்டாட்டம் நிகழ்ச்சிகளும், அக்டோபா் மாதம் விளையாட்டுத் துறை சாா்ந்த கைப்பந்து, சதுரங்கம், பூப்பந்தாட்டம், சுண்டாட்டம், கலைச் சாா்ந்த கதை எழுதுதல், ஓவியப் போட்டி, புகைப்படம் எடுத்தல் போன்ற தனித்திறமையை காட்டும் போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில், 90 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டதில், 25 போ் வெற்றிப் பெற்றனா். அவா்களுக்கு கேடயம், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி புதன்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் பி.சுமதி, அரியலூா் ஆதிதிராவிடா் நல தனிவட்டாட்சியா் ரா.மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.