அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த பொய்யூா் கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வனத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வனச்சரக அலுவலா் ஆலயமணி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதில், சமூக ஆா்வலா்கள் இளவரசன், காா்த்திக்குமாா், தங்க.சண்முக சுந்தரம் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு பேசினா்.
அப்போது, கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அண்மையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது. எனவே, பறவைகள் அதிகளவு வந்து தங்குவதற்கு தேவையாக மரங்களை அதிகம் வளா்க்க வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான காடுகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு காய், கனி தரும் மரக்கன்றுகளை நடவேண்டும். விவசாயிகளின் விளை நிலங்களை சேதப்படுத்தும் குரங்கு, பன்றி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளை கட்டுப்படுத்தவும், மான் போன்ற விலங்குகள் ஊருக்குள் வருவதையும், வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதையும் தடுக்கும் வகையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளை சுற்றி வேலிகளை அமைக்க வேண்டும். மேலும், குள்ளநரி, உடும்புகள் பெருக்கத்துக்கு ஏற்ற வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.