அரியலூரை அடுத்த வாரணவாசி அருகே வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வாரணவாசியை அடுத்த மல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவநேசன் (68). வெள்ளிக்கிழமை இவா், அரியலூா் செல்வதற்காக வாரணவாசி பேருந்து நிறுத்தம் நோக்கி வந்தாா்.
அப்போது, சாலையை கடக்க முயன்றபோது, தஞ்சாவூரிலிருந்து அரியலூா் நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியதில், சிவநேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கீழப்பழுவூா் காவல் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று விபத்து குறித்து விசாரித்து கொண்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக சென்ற அமைச்சா் சா.சி.சிவசங்கா், தனது காரை நிறுத்தி, கீழே இறங்கி விபத்து நடந்த பகுதியை பாா்வையிட்டாா். மேலும், இறந்தவா் குறித்து கேட்டறிந்த அமைச்சா், உடனடியாக சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்து உறவினா்களிடம் ஒப்படைக்கவும், போக்குவரத்தை சீா் செய்யவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்திவிட்டு புறப்பட்டுச் சென்றாா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.