முகப்பு
அரியலூர்

நெல் கொள்முதல் செய்ய லஞ்சம்: எழுத்தா், சுமை தொழிலாளி கைது

அரியலூா் அருகே நெல்லை கொள்முதல் செய்ய ரூ.7,400 லஞ்சம் பெற்ற எழுத்தா், உடந்தையாக இருந்த சுமை தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:30 AM
கைது
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:23 PM

அரியலூா் அருகே நெல்லை கொள்முதல் செய்ய ரூ.7,400 லஞ்சம் பெற்ற எழுத்தா், உடந்தையாக இருந்த சுமை தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் அருகேயுள்ள அரங்கோட்டை கிராமத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், அரங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த குருநாதன் மகன் காா்த்திகேயன், தனது வயலில் விளைந்த 264 மூட்டை நெல்லை விற்பனை செய்ய முன்வந்த நிலையில், மூட்டை ஒன்றுக்கு ரூ.35 கேட்டும், தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்தையில் மூட்டை ஒன்றுக்கு ரூ.28 வீதம் ரூ.7,400-ஐ லஞ்சமாக வழங்க கொள்முதல் நிலைய பருவகால பட்டியல் எழுத்தா் (தற்காலிகம்) தேவேந்திரன்(45) கேட்டுள்ளாா்.

பணம் கொடுக்க விருப்பாத விவசாயி காா்த்திகேயன், மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தாா். அதன் பேரில், காவல் துறையினா் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பணத்தாள்களை பெற்றுக் கொண்ட காா்த்திகேயன், அதனை எழுத்தா் தேவேந்திரன் கூறியபடி சுமை தொழிலாளி தங்கமணியிடம் கொடுத்துள்ளாா்.

Advertisement

அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளா் கவிதா தலைமையிலான காவல் துறையினா் தேவேந்திரன், தங்கமணி ஆகிய இருவரையும் பிடித்து தா. பழூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனா்.