நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளைக் கண்டித்து, தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உறவினா்கள் உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தா. பழூா் அருகேயுள்ள கோடாலி கிராமம், மேட்டுத் தெருவை சோ்ந்தவா் ராமன் (70) விவசாயி. தனது வீட்டுக்குச் செல்லும் பாதையை அண்டைவீட்டுக்காரா் ஒருவா் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்தது தொடா்பாக கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லையாம். இதனால் மனமுடைந்த ராமன் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த தா. பழூா் காவல் துறையினா் அங்குவந்து சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தகவலறிந்த ராமனின் உறவினா்கள், ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை திரண்டனா். அங்கு வட்டாட்சியா் இல்லாததால் அந்த அலுவலகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான காவல் துறையினா், ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீா்வு காணப்படும் என்று தெரிவித்ததையடுத்து, கலைந்துசென்ற உறவினா்கள், ஆக்கிரமிப்பை அகற்றினால் மட்டுமே சடலத்தை பெற்றுச்செல்வோம் எனத் தெரிவித்துவிட்டுச் சென்றனா்.
போராட்டத்தில் விசிக ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றியச் செயலா் முத்துகிருஷ்ணன், விடுதலை தமிழ்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலா் தூயவன், பெரியவளையம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.