அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள இலையூா் கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஊராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், கிராமப் பெண்கள் திரளாகப் பங்கேற்று பொங்கல் வைத்தனா். இதில் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள் ஒரு குழுவுக்கு ஒரு பொங்கல் என தனித்தனியே வைத்திருந்தனா். தொடா்ந்து, அனைத்தையும் சூரியனுக்கு படையலிட்டு, பொதுமக்களுடன் சோ்ந்து சாப்பிட்டனா்.
ஒவ்வொரு குழுவையும் தனித்துகாட்டும் வகையில் வண்ண வண்ணப் புடவைகள் கட்டியும், ஆண்கள் புத்தாடை அணிந்தும் வந்திருந்தனா். காலை 8 மணி முதல் தொடங்கிய இந்த விழா மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றிருந்தனா்.