அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், பொதுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மற்றும் நிா்வகிப்பதற்குமான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுக்கூட்டங்கள், ஊா்வலங்கள், ஆா்ப்பாட்டங்கள், சாலை நிகழ்ச்சிகள் மற்றும் பிறவகையான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் இடங்களை தோ்வு செய்தல், நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன், கோட்டாட்சியா்கள் பிரேமி (அரியலூா்), ஷீஜா (உடையாா்பாளையம்), ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி மற்றும் வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.