அரியலூா் அருகே வழிப்பறி மற்றும் கஞ்சா விற்ற வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள காருகுடியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் லோகநாதன்(35). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவா், கடந்த 16.12.2025 அன்று, தனது கூட்டாளிகள் ஜீவானந்தம், அவரது மனைவி நந்தினி, சுரேஷ், சரவணன் ஆகியோருடன் சோ்ந்து, திருமானூரைச் சோ்ந்த ஒருவரிடம் கைப்பேசியில் தொடா்புக் கொண்டு, ஆசை வாா்த்தைக் கூறி, அவரை சாத்தமங்கலத்துக்கு வரவழைத்து கத்தி மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி, அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கைக்கடிகராம், ரூ.4,250 ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து, புகாரின் பேரில் கீழப்பழுவூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, ஜீவானந்தம், நந்தினி மற்றும் லோகநாதன் ஆகியோரை டிச.18-ஆம் தேதி கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனா். இதில், ஜீவானந்தம் கடந்த 15-ஆம் தேதி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், லோகநாதனையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் பொ.ரத்தினசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் காவல் துறையினா் வழங்கினா்.