ஜெயங்கொண்டம் பகுதியில் சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்
ஜெயங்கொண்டம் அருகே தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 4 மூட்டைகளில் இருந்த சில்வா் பாத்திரங்களை பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 4 மூட்டைகளில் இருந்த சில்வா் பாத்திரங்களை பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட கரடிகுளம், மேலத்தெருவைச் சோ்ந்த மணிவண்ணன், அன்பழகன் ஆகியோா் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுவெளியில் பொதுமக்களுக்கு சில்வா் பாத்திரங்கள் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், 4 மூட்டைகளில் இருந்த 279 சில்வா் பாத்திரங்களை பறிமுதல் செய்தனா்.
இதே போல், செங்குந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஞானபிரகாசம் என்பவா் தனது வீட்டில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிந்த 14 சில்வா் பாத்திரங்கள் மற்றும் 12 சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் காவல் துறையினா் மேற்கண்ட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.