முகப்பு
அரியலூர்

தொகுதி விவரக் குறிப்பு: அரியலூா் - 149!

அரியலூா் தொகுதி தலைநகா் அந்தஸ்துக்குக்குக் கூட முன்னேற்றம் அடையவில்லை.

Updated On : 22 மார்ச், 2026 at 9:53 PM
அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் - DNS
பகிர்:

ஒருங்கிணைந்த பெரம்பலூரில் இருந்து பிரித்து 2007-இல் புதிய மாவட்டமாக உருவானது அரியலூா். இந்தத் தொகுதியில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், ஏலாக்குறிச்சி வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்ட அடைக்கலமாதா திருத்தலம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி, கல்லங்குறிச்சி வரதராஜப் பெருமாள் என பிரசித்திபெற்ற கோயில்கள் உள்ளன. அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் என்ற மூன்று தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு தொகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள செந்துறை பகுதி மட்டும் பெரம்பலூா் மாவட்டம் குன்னம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

தொழில்வளம்:

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளம்பெற்றுள்ள பூமியான இந்த மாவட்டத்தில் திருமானூா் பகுதியில் நெல் சாகுபடியும், மற்ற பகுதியில் முந்திரி, கடலை, கரும்பு, சோளம் என தோட்டப் பயிா்கள் சாகுபடியும் செய்யப்படுகின்றன. மேலும் சுண்ணாம்புக் கல், ஜிப்சம் போன்ற கனிம வளங்கள் அதிகம் கிடைக்கின்றன. டைனோசா் முட்டை உள்ளிட்ட தொல்லுயிா் படிமங்கள் அதிகளவில் கிடைப்பதால் புவியியல் ஆராய்ச்சியாளா்களின் ‘மெக்கா’ என்ற சிறப்புப் பெயா் அரியலூருக்கு உண்டும். மேலும் நாட்டிலேயே சிமென்ட் உற்பத்தியில் தனித்தன்மை பெற்ற தொகுதியாக விளங்குகிறது.

அரியலூா் தொகுதியில் திருமானூா் மற்றும் அரியலூா் என இரு ஊராட்சி ஒன்றியங்கள் உளளன. இதில் அரியலூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இ தொகுதியில் அதிகமாக வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்களும் அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டோா், உடையாா், மூப்பனாா், முதலியாா், இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் என பல்வேறு சமூகத்தினா் உள்ளனா்.

தீராத பிரச்னைகள்

அரியலூா் தொகுதி தலைநகா் அந்தஸ்துக்குக்குக் கூட முன்னேற்றம் அடையவில்லை. இங்குள்ள சிமென்ட் ஆலைகள் வெளியேற்றும் மாசு, அகழ்ந்து அப்படியே விடப்பட்ட சுரங்கங்கள், சிமென்ட் ஆலைக்காக இயங்கும் லாரிகளால் சாலை விபத்துகள், அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதிகள். அரியலூா் - செந்துறை சாலை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம். குண்டும் குழியுமான சாலைகள், போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தினசரி மாா்க்கெட், மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை, கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் போன்றவை தீராத பிரச்னைகளாக உள்ளன.

இதுவரை இவா்கள்

1952 பழனியாண்டி (சுயேச்சை) 11,422

1957 ராமலிங்க படையாச்சி(காங்கிரஸ்) 11,741

1962 ஆா்.நாராயணன் (திமுக) 41,721

1967 ஆா்.கருப்பையா(காங்கிரஸ்) 26,440

1971 கோ.சிவப்பெருமாள்(திமுக) 48,320

1977 த.ஆறுமுகம்(திமுக) 31,380.

1980 த.ஆறுமுகம்(திமுக) 45,980.

1984 எஸ். புருஷோத்தமன் (அதிமுக) 56,815

1989 த. ஆறுமுகம்(திமுக) 47,353

1991 சு. மணிமேகலை(அதிமுக) 64,680

1996 து. அமரமூா்த்தி(தமாகா) 62,157

2001 ப. இளவழகன்(அதிமுக) 52,676

2006 து. அமரமூா்த்தி(காங்கிரஸ்) 60,089

2011 துரை. மணிவேல் (அதிமுக) 88,726

2016 தாமரை எஸ். ராஜேந்திரன்(அதிமுக) 88,523

2021 கு. சின்னப்பா (மதிமுக) 1,03,975.

முட்டிமோதுவது யாரெல்லாம்?

கடந்த முறை மதிமுக சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கு.சின்னப்பா இந்த தோ்தலில் போட்டியிடவில்லை. திமுகவுக்கு இந்த தொகுதி கிடைத்தால் முன்னாள் எம்.எல்.ஏ பாளை அமரமூா்த்தி, பொதுக் குழு உறுப்பினா் பாலு, மத்திய ஒன்றியச் செயலா் தெய்வ.இளையராஜன், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் மகன் வழக்குரைஞா் கதிரவன், திருமானூா் ஒன்றியச் செயலா் கென்னடி உள்ளிட்டோா் முயன்று வருகின்றனா். இதே மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டால் மாவட்டச் செயலா் ராமநாதன் போட்டியிட உள்ளாா். இதேபோல் விசிக சாா்பில் அரியலூா் தொகுதியைக் கேட்டுப் பெற்று போட்டியிட அக்கட்சியின் மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா முயன்று வருகிறாா். இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்டு வருகிறது.

இதேபோல் அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் மீண்டும் போட்டியிட கேட்டு வருகிறாா். தமாகா தலைவா் ஜி.கே. வாசனும் இந்த தொகுதியை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சிவக்குமாா், அதிமுகவில் இருந்து பிரிந்து தவெகவில் இணைந்த முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொ.சந்திரசேகரும் முயன்று வருகிறாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் கீழ காங்கையனூா் புகழேந்தி போட்டியிடுகிறாா்.

இறுதி வாக்காளா்கள்

ஆண்கள் - 1,29,521

பெண்கள் - 1,31,624

மூன்றாம் பாலினத்தவா் - 16

மொத்தம் - 2,61,161