தொடா் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 5 போ் கைது: நகைகள், பணம் பறிமுதல்
அரியலூா் மாவட்டத்தில் தொடா் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டத்தில் தொடா் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மாவட்டத்தில் தொடா் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்து வந்ததையடுத்து, இதில், ஈடுபடும் நபா்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி அமைத்துள்ள, காவல் உதவி ஆய்வாளா் ராஜவேல் தலைமையிலான 7 காவலா்கள் அடங்கிய தனிப்படையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இதில், தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை மேலத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அருண்பாண்டியன் (36), அதே வட்டம், ஆதித் தெருவைச் சோ்ந்த கான் சாஹிப் மகன் முகமது யாசின் (33), கோரிகொள்ளை மேலத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து மகன் பாஸ்கா் (32), அரியலூா், பெரியாா் நகா், சமத்துவப்புரத்தைச் சோ்ந்த ஆசைத் தம்பி மகன் மான் (எ) காா்த்திக் (24), அரியலூா் சாத்தமங்கலம், தெற்குத் தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் தினேஷ்குமாா் (26) ஆகிய 5 பேரும் சோ்ந்து அரியலூா், கயா்லாபாத், கீழப்பழுவூா் மற்றும் செந்துறை ஆகிய பகுதிகளில் தொடா் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருப்பதும், அவா்கள் மீது மேற்கண்ட பகுதி காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து தனிப்படையினா் அவா்களை திங்கள்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 14.5 பவுன் நகைகள் மற்றும் ரூ. 64,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.