"தொலைக்காட்சியில் நேரத்தை தொலைத்து விடாதீர்'
தொலைக்காட்சியில் நேரத்தை தொலைத்துவிடாதீர்கள் என மாணவ, மாணவிகளுக்கு பொது நூலக இயக்குநர் ச.கண்ணப்பன் அறிவுறுத்தினார்.
தொலைக்காட்சியில் நேரத்தை தொலைத்துவிடாதீர்கள் என மாணவ, மாணவிகளுக்கு பொது நூலக இயக்குநர் ச.கண்ணப்பன் அறிவுறுத்தினார்.
கரூர் மாவட்ட பொது நூலகத்துறை மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலுக உறுப்பினர் அட்டை (ஸ்மார்ட் கார்டு) மற்றும் நூலக நன்கொடையாளர்களை சிறப்பிக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி ச.கண்ணப்பன் பேசியதாவது:
மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டும் வாசித்தால் போதாது.
பல்வேறு நல்ல நூல்களை வாசித்தால் தான் அறிவு விசாலமாகும். மாணவ, மாணவிகள் வாரத்தில் ஒரு நாளில் ஒருமணி நேரமாவது நூலகத்துக்கு வந்து செல்ல வேண்டும்.
பள்ளி விடுமுறை நாள்கள், தேர்வு விடுமுறை நாள்களில் கோயில், உறவினர், தொலைக்காட்சி, நண்பர்களுக்கு என நேரம் ஒதுக்குகிறோம். அதுபோல் நூலகங்களுக்கு செல்லவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். தொலைக்காட்சியில் நேரத்தை தொலைத்துவிட வேண்டாம்.
புத்தகம் வாசிப்பதால் வாசிப்புத்திறன் மேம்படும். படிக்க, படிக்க அறிவும் வளரும். கோயிலும், நூலகமும் மட்டுமே அமைதியான இடம். நூல்களை நன்கு வாசிப்பவர்கள் பணிகளை செம்மையாக செய்பவர்களாக மாறுவார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், பரணிபார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்திப்பேசினர்.
மாவட்ட நூலக அலுவலர் மா.தனலட்சுமி வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் உ.சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை வாசகர் வட்ட நெறியாளர் அ.ச.சேதுபதி தொகுத்து வழங்கினார். மாவட்ட மைய நூலகர் செ.செ.சிவக்குமார் ஒருங்கிணைத்தார். விழாவில் வாசகர் வட்டத்தினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், நெறியாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.