முகப்பு
கரூர்

மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் அல்ல

மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் அல்ல என்றார் குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி அகிலா ஷாலினி.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் அல்ல என்றார் குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி அகிலா ஷாலினி.
குளித்தலை வட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்   குளித்தலை கிளைச்  சிறைச்சாலையில் புதன்கிழமை நடைபெற்ற சட்ட உதவி முகாமுக்குத் தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது:
மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் அல்ல.  எனவே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சட்டம் பாதுகாப்பு அளிக்கும். இதை உறுதிப்படுத்தவே  வட்டம், மாவட்ட, மாநில, தேசிய அளவில் இலவச சட்டஉதவி முகாம்களை உச்ச நீதிமன்றம் மாதந்தோறும் நடத்தி வருகிறது. இதனால் தனி மனிதனின் நீதி மறுக்கப்படுவது தடுக்கப்படுகிறது.  
எனவே நீண்டகாலமாக விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ளவர்கள் இலவச சட்ட  உதவி முகாமை நாடினால் அவர்களுக்கு வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்து இலவசமாக வாதாடி நீதி கிடைக்க  ஏற்பாடு செய்யப்படுகிறது.
தற்போது சமுதாயத்தில் ஆதாயக் கொலைகள் அதிகரித்துவிட்டன. 
இக்கொலைகளுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. எனவே சிறையில் உள்ள அனைவரும்  சிறைச்சாலையை சீர்திருத்த இடமாகக் கருதி, மீண்டும் தவறு செய்யாமல் திருந்தி வாழ வேண்டும் என்றார்.
வழக்குரைஞர் சங்கத் தலைவர் சாகுல் ஹமீது, செயலர்  மனோகரன், துணைத் தலைவர் மருதமுத்து, முன்னாள் அரசு வழக்குரைஞர் நாகராஜன், வழக்குரைஞர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →