கரூர்

ஸ்டாலின் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 66 ஆவது பிறந்தநாளையொட்டி, கரூர் மாவட்ட திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் போட்டிகளில் வென்றவர்களுக்கு 
ரூ. 20 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக ஞாயிற்றுக்கிழமை காலை அன்புக்கரங்கள் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, சிஎஸ்ஐ விளையாட்டு மைதானத்தில் ஏழைகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சரும்,  திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கனகராஜ் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், துணைச் செயலர்கள் எம்எஸ்கே.கருணாநிதி, நகரச்செயலர்கள் குளித்தலை மாணிக்கம், சுப்ரமணியன், ஒன்றியச் செயலர்கள் கே.கருணாநிதி, கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் விகேடி.ராஜ்கண்ணு  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முரசொலி நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கி மேலும் பேசியது: 
திமுக குடும்பக் கட்சி என்கின்றனர். கலைஞரால் பாராட்டப்பட்டவர் ஸ்டாலின். அதனால்தான் அவரை தலைவராக ஏற்றுள்ளோம். நான் கட்சியில் கடைசித் தொண்டனாகத் தான் இருக்கிறேன். ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களுக்காக உழைக்கும் இயக்கம் திமுக மட்டும்தான். விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர உள்ளார்.  இங்கு வெற்றி உறுதியாகிவிட்டது என்றார்.
விழாவில் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி பேசியது:  இளைஞர்களே நீங்கள் தான் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட வேண்டும்.  வரும் தேர்தல்களில்   இளைஞர்களைப் பற்றி கவலைப்படாத எடப்பாடி அரசுக்கும், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள் என்றார்.
விழாவில், இளைஞரணி துணைச் செயலாளர் மகேஷ் பொய்யாமொழி, சொத்து பாதுகாப்பு குழு செயலர் கே.சி.பழனிசாமி, விவசாய அணித்தலைவர் ம.சின்னசாமி, நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர்ராஜேந்திரன், செயலர் பரணி கே.மணி, குளித்தலை எம்எல்ஏ ராமர், கொள்கை பரப்பு துணைச் செயலர் கரூர் முரளி, வர்த்தக அணி துணைச் செயலர் பல்லவிராஜா, தாரணிசரவணன், கோல்ட்ஸ்பாட் ராஜா மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும், கட்சியினரும் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT