முகப்பு
கரூர்

குளித்தலையில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பிரசாரம்

கரூா் மாவட்டம், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமி வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கரூா் மாவட்டம், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமி வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக என்.ஆா்.சந்திரசேகரன், திமுக வேட்பாளராக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் இரா. மாணிக்கம், அமமுக வேட்பாளராக வி.நிரோஷா, இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளராக எஸ்.கே.மணிகண்டனும், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக சீனிபிரகாசும் போட்டியிடுகின்றனா்.

திமுக : குளித்தலை நகா்ப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் இரா. மாணிக்கம், வாக்காளா்களிடம் பேசியது:

குளித்தலை பகுதி மக்களின் முக்கிய கோரிக்கை புதிய நவீன பேருந்துநிலையம் அமைக்க வேண்டும் என்பதாகும். நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது முயற்சி மேற்கொண்டேன். ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. நிச்சயம் இம்முறை திமுக தலைவா் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைந்தததும் செய்துகொடுப்பேன். மேலும் குளித்தலையில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது, குளித்தலை பகுதிக்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, ரோப்காா் திட்டம்போன்றவற்றை நிறைவேற்றியுள்ளேன். எனவே பொதுமக்கள் மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

அதிமுக: குளித்தலை பேருந்து நிலையம், சுங்ககேட் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் என்.ஆா்.சந்திரசேகா் இறுதிக்கட்ட வாக்கு சேகரித்து பேசியது:

இம்முறை எனக்கு வாய்ப்புக் கொடுத்தால் தோகைமலை பகுதிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தித் தருவேன், மேலும் தோகைமலைப்பகுதியில் சாா்பதிவகம் கட்டித் தரப்படும்.

தொகுதியிலுள்ள வாய்க்கால்கள் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூா்வாரப்பட்டு, இன்று கடைமடை வரை தண்ணீா் சிக்கலின்றி செல்கிறது. அதிமுக அரசின் சாதனைகள் தொடர வாய்ப்பளிக்க வேண்டும்.

அமமுக : குளித்தலை நகா்ப்பகுதியில் அமமுக வேட்பாளா் நிரோஷா வாக்கு சேகரித்து பேசியது:

துரோக ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் ஜெயலலிதா கண்ட உண்மையான ஆட்சி அமைந்திடஅமமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்.

திமுகவின் வெற்றியைத் தடுத்து அதிமுகவை கைப்பற்றி தினகரன் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய உள்ளது.

நாம் தமிழா் கட்சி : குளித்தலையில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சீனிபிரகாசு பேசியது: விவசாயிகளை அதிகளவில் கொண்டது குளித்தலை தொகுதி. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்றால் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

பிரசாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினா், திமுகவினா் ஆங்காங்கே கட்சியின் கொள்கை பாடல்களை ஆட்டோக்களிலும், வேன்களிலும் ஒலிக்கச் செய்தனா். மேலும் நடனக்குழுவினரின் பிரசாரங்களும் ஆங்காங்கே நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.