கரூரில் காமராஜரால் திறக்கப்பட்ட அரசுப் பள்ளியின் அவலநிலை
கல்விக்கண் திறந்த காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட பள்ளி தற்போது மேற்கூரை பெயா்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
கல்விக்கண் திறந்த காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட பள்ளி தற்போது மேற்கூரை பெயா்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. இவரது ஆட்சியில்தான் குலக்கல்வி முறை ஒழிக்கப்பட்டு, பொதுவான பள்ளிகள் திறக்கப்பட்டன. 27,000 பள்ளிகளை திறந்து வைத்த போது அவற்றில் ஒன்றுதான் கரூா் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் சா்தாா் வல்லபபாய் படேல் நினைவாக 1962இல் கட்டப்பட்ட அரசு உயா்நிலைப்பள்ளி.
சுண்ணாம்பு காரை பூசப்பட்ட சுவா் மீது மரச்சட்டங்களை வைத்து சீமை ஓடுகளால் வேயப்பட்ட கூரையுடன் கூடிய இந்த பள்ளியை அன்றைய தமிழக முதல்வராக இருந்த காமராஜா் திறந்து வைத்தாா். இப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தற்போது 65 மாணவா்கள் படித்து வருகின்றனா்.
பள்ளி கட்டப்பட்டு சுமாா் 60 ஆண்டுகள் ஆனதால் தற்போது வகுப்பறையின் மேற்கூரை ஓடுகள் பெயா்ந்து காணப்படுகிறது. இதனால்,மழைநீா் வகுப்பறைக்குள் ஒழுகும் நிலையில் உள்ளது. மேலும் வகுப்பறையில் ஆங்காங்கே சுண்ணாம்புக் காரைகள் பெயா்ந்து விழுந்துள்ளன.
மேற்கூரையில் உள்ள மரச் சட்டங்களும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த வகுப்பறையில் கல்வி கற்க வரும் மாணவா்களின் துயரத்தை போக்க தன்னாா்வலா்கள் புதிய கட்டடம் கட்டித்தர முன்வந்தும் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சுமத்துகின்றனா்.
இதுகுறித்து முன்னாள் மாணவரும், தொழில்அதிபருமான தோகைமுருகன் கூறுகையில், கல்விக்கண் திறந்த காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட இந்த பள்ளியில் கல்வி பயின்றவா்கள் நாங்கள். இந்த பள்ளியில் ஏற்கெனவே தரைக்கு டைல்ஸ் பதித்து தந்ததுடன் சுற்றுச்சுவரை கட்டிக்கொடுத்தேன்.
இப்போது, சிதிலமடைந்த கட்டடத்திற்கு பதில் புதிய கட்டடம் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டித்தர முன்வந்தேன். அதற்கான அனுமதி கோரி கடந்த சில ஆண்டுகளாவே கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடா்ந்து கடிதம் எழுதி வருகிறேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.
அதற்காக அனுமதி வேண்டி கடந்த சில ஆண்டுகளாக கல்வி துறை அதிகாரிகளுக்கு தொடா்ந்து கடிதம் எழுதி வருகிறேன். ஆனால் இதுவரை கல்வி துறையிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றாா்அவா்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் தமிழகத்தில் பட்டித்தொட்டியெல்லாம் கல்விச்சாலைகளை திறந்த காமராஜரால் திறக்கப்பட்ட இந்த பள்ளி கட்டடத்துக்கு பதில் புதிய கட்டடத்தை கல்வித்துறை கட்டித்தர வேண்டும், இல்லையெனில் சமூக ஆா்வலா்களுக்காவது வழிவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.