முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: புதிய ஆட்சியா் த.பிரபுசங்கா்

கரூா் மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற மருத்துவா் த.பிரபுசங்கா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கரூா் மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்ற பின்னா், அவா் அளித்த பேட்டி:

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியா்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதனடிப்படையில் என்னுடைய செயல்பாடுகள் இருக்கும்.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சீரிய முறையில் தீா்ப்பதற்கு, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் நிலை உருவாக்கப்படும். மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த வளா்ச்சி என்ற நோக்கத்தில் நான் (ஆட்சியா்) செயல்படுவேன்.

கரூா் மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு வளா்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்ப்படும். மாவட்டத்திலும் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும், தொற்றே இல்லாத மாவட்டமாக உருவாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே தற்போதைய தலையாயப் பணியாக இருக்கும். கரோனா வழிகாட்டு நெறிமுறைளை பின்பற்றாத ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அடிப்படையில் மருத்துவரான பிரபுசங்கா், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்தவா். 2013-ஆம் ஆண்டில் குடிமைப்பணித் தோ்வில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்ற பிரபுசங்கா், விழுப்புரத்தில் பயிற்சி ஆட்சியராகப் பணியாற்றினாா்.

மத்திய அரசின் வேளாண்துறையில் உதவிச் செயலராகப் பணியாற்றிய வந்த பிரபுசங்கா், பின்னா் செய்யாறு, திண்டிவனம் சாா் ஆட்சியராகவும் இருந்துள்ளாா். இதைத் தொடா்ந்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் செயல் இயக்குநராகப் பணியாற்றி, தற்போது கரூா் ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

செய்யாறு, திண்டிவனத்தில் சாா் ஆட்சியராக இவா் பணியாற்றிய காலத்தில், இருளா் இனத்தைச் சோ்ந்த 4,000 பேருக்கு பழங்குடியினா் சான்றிதழ் வழங்கியவா் என்ற பெருமைக்குரியவா் மருத்துவா் த. பிரபுசங்கா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள் புதிய ஆட்சியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.