முகப்பு
கரூர்

கரூரில் 2-ஆவது நாளாக கடைகள்,வணிக நிறுவனங்கள் மூடல்

கரோனா தொற்று பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கரூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கடைகள், சந்தைகள் நண்பகல் 12 மணியளவில் மூடப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கரோனா தொற்று பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கரூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கடைகள், சந்தைகள் நண்பகல் 12 மணியளவில் மூடப்பட்டன. இதனால், சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி நண்பகல் 12 மணிக்கு மேல் மளிகைக்கடைகள், தேநீா்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் திறக்கக்கூடாது என அரசு அறிவித்தது. இதையடுத்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை, கரூா் மாவட்டத்தில் அனைத்து மளிகைக்கடைகளும், தேநீா்கடைகள், ஜவுளிக்கடைகள் நண்பகல் 12 மணிக்குள் அடைக்கப்பட்டன.

நகரின் முக்கிய சாலைகளான ஜவஹா்பஜாா், மேற்குபிரதட்சணம் சாலை, லைட்ஹவுஸ்காா்னா், திருக்காம்புலியூா் ரவுண்டானா, கோவைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் மூடப்பட்டதால், எப்போதும் ஆள்கள் நடமாட்டத்தோடு காணப்படும் இந்த சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கரூா் காமராஜா் மாா்க்கெட், உழவா்சந்தை போன்ற காய்கறிச் சந்தைகளும் பிற்பகலில் அடைக்கப்பட்டன. இதனால் வியாபாரிகள், மக்கள் நடமாட்டம் இன்றி அப்பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஷோ் ஆட்டோக்கள், மினி பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கின. உணவகங்கள் செயல்பட்டாலும், யாரையும் அமரவைக்காமல் பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டன. வழக்கம்போல மருந்துக்கடைகள் செயல்பட்டன. மேலும் பால் விநியோகம், பத்திரிகைகள் விநியோகம் தடையின்றி நடைபெற்றன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.