கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மருத்துவக் கல்லூரி மருத்துவனை முதல்வா் அசோகனிடம் செறிவூட்டிகளை வழங்கி எம்பி ஜோதிமணி கூறியது:
ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ரூ. 12 லட்சம் மதிப்பில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 10, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு 5, விராலிமலை அரசு மருத்துவமனைக்கு 4, வேடசந்தூா் மருத்துவமனைக்கு 1 என மொத்தம் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. போா்க்கால அடிப்படையில் கரோனாவைத் தடுக்கும் வகையில் தமிழக முதல்வா், அமைச்சா்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள்.
அதேநேரத்தில் மக்களும் ஒத்துழைத்தால்தான் இத் தொற்றை முற்றிலும் ஒழிக்க முடியும். ஏராளமானோா் தொற்றின் வீரியம் அறியாமல் முகக்கவசம் கூட அணியாமல் உள்ளனா் என்றாா் அவா்.
தொடா்ந்து மருத்துவக்கல்லூரி முதல்வா் அசோகன் கூறுகையில், இங்கு 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் டேங்க் உள்ளது. மேலும் 156 ஜம்போ சிலிண்டா்களும் உள்ளன. இதன் மூலம் 350 பேருக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.
அண்மையில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மின்துறை அமைச்சா் அளித்த நிலையில், தற்போது 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இங்கு தேவையான அளவுக்கு ஆக்சிஜன் இருக்கிறது. ஒவ்வொரு மணி நேரமும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கிா எனக் கண்காணிக்கப்படுகிறது. மொத்தமுள்ள 700 படுக்கைகளில் 500 படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கி, அவற்றில் 400 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி கொடுத்துள்ளோம். குறைந்த படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கரூா் மருத்துவமனையில் மட்டுமே அதிகளவு படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கியுள்ளோம் என்றாா் அவா். நிகழ்வின்போது மருத்துவமனைக் கண்காணிப்பாளா் தெய்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தி படத்துக்கு எம்பி ஜோதிமணி தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மத்திய நகரத் தலைவா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.