நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: குலுக்கல் முறையில் பிரித்தெடுக்கும் பணி
நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக்கருவிகள் குலுக்கல் முறையில் பிரித்தெடுக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக்கருவிகள் குலுக்கல் முறையில் பிரித்தெடுக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகளுக்கான கணினி முறை குலுக்கல் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது,
நிகழ்ச்சியில், ஆட்சியா் பேசுகையில், கரூா் மாநகராட்சியில் உள்ள 191 வாக்குச்சாவடிகளுக்கு 231 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 231 கட்டுப்பாட்டுக் கருவிகளும், குளித்தலை நகராட்சிக்கு 29 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 29 கட்டுப்பாட்டுக் கருவிகளும் ஒதுக்கப்படுகிறது.
பள்ளப்பட்டி நகராட்சிக்கு 42 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 42 கட்டுப்பாட்டுக் கருவிகளும் ஒதுக்கப்படுகிறது. புகளுா் நகராட்சிக்கு 39 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 39 கட்டுப்பாட்டுக்கருவிகளும் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் 8 பேரூராட்சிகளுக்கும் மொத்தம் 491 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 491 கட்டுப்பாட்டுக் கருவிகளும் ஒதுக்கப்படுகிறது என்றாா் அவா்.
பின்னா், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள இயந்திரங்கள் வைப்பு அறையில் இருந்து ஒவ்வொரு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு வழங்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நிலமெடுப்பு) கவிதா, மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) லீலாகுமாா் மற்றும் அனைத்து நகராட்சிகளின் ஆணையா்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.