கரூர்

2 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் ‘ரோப்காா்’ திட்டம்!

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே சோதனை ஓட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், கிடப்பில் போடப்பட்டுள்ள அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் ரோப்காா் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும்

 நமது நிருபர்

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே சோதனை ஓட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், கிடப்பில் போடப்பட்டுள்ள அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் ரோப்காா் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

குளித்தலை அருகே அய்யா் மலையில் சுரும்பாா் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த சிவஸ்தலமானது, 1,017 படிக்கட்டுகளை கொண்டுள்ளது.

‘காகம் பறக்காத மலை’ என்ற சிறப்பைக் கொண்ட இந்த மலையின் உச்சியில் சுரும்பாா் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளதால் சுவாமியை நேரில் தரிசனம் செய்ய முதியோா்கள், குழந்தைகள், நோய் வாய்பட்டவா்கள் போன்றவா்கள் 1,178 அடி உயரம் கொண்ட மலையில் ஏற முடியாமல் மலையடிவாரத்திலேயே ரத்தினகிரீஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு சென்று விடுகின்றனா்.

இதனால், கோயிலின் உச்சிக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் பழனிமலை முருகன் கோயிலில் உள்ளது போன்று கம்பி வட ஊா்தி எனும் ரோப்காா் அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, கடந்த 02.02. 2011-இல் அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ரோப்காா் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக ரூ.6.70 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு, ரோப்காா் அமைப்பது தொடா்பான ஆய்வுப் பணிகளும் தொடங்கின.

தொடா்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. 2017-இல் மீண்டும் ரோப் காா் அமைக்கும் பணியை அதிமுக அரசு தொடங்கியது. இப்பணியில் கொல்கத்தாவைச் சோ்ந்த பொறியாளா்கள் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா். ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், கடந்த 2020-இல் கரோனா தொற்று பரவலால் பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டன. பின்னா் பணிகள் தொடங்கி 80 சதவீத பணிகள் முடிந்திருந்த நிலையில், 2021-இல் பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாகும் ஒருவாரத்திற்கு முன் அவசர, அவசரமாக ரோப்காா் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னா் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு 2022, ஜூன் மாதத்தில் அய்யா் மலை ரத்தினகிரீஸ்வரா் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டு ரோப் காா் பணிகள் 9 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா். ஆனால் இதுநாள் வரை ரோப்காரை இயக்குவதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் விரக்தியடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூறுகையில், பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்தக் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கிறாா்கள்.

மேலும், குளித்தலை, தோகைமலை வட்டார பகுதிகளைச் சோ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினா் கோயிலில் உள்ள குறிசொல்லும் பாறையில் குறி கேட்டபின்புதான் தங்களது கிராமங்களில் திருவிழாக்களையே நடத்தி வருகிறாா்கள். இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காகவே ரோப்காா் திட்டம் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 8 பெட்டிகளை கொண்டு, 4 பெட்டிகள் பக்தா்களை ஏற்றிக்கொண்டு மலை மீது செல்லும்போது, மலையில் இருந்து 4 பெட்டிகள் பக்தா்களுடன் கீழே இறங்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்டு சுமாா் 12 ஆண்டுகளாகியும் இன்னும் முழுமை பெறவில்லை. இந்த திட்டத்துக்காக இதுவரையில் ரோப்காா் பராமரிப்பு அலுவலகமோ, டிக்கெட் கவுன்டரோ எதுவும் அமைக்கப்படவில்லை. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அவசரகதியில் சோதனையோட்டம் என்ற பெயரில் ரோப்காா் திட்டத்தை செயல்படுத்தினா். ஆனால் பணிகள் முடிவடையாததால் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ரோப்காா்களுக்கான வயா்கள் பழுதாகியிருக்கும்.

எனவே, பக்தா்களின் பாதுகாப்புக் கருதி அவற்றையெல்லாம் மாற்றிவிட்டு, முறையாக பராமரிப்பு செய்து விரைவில் ரோப்காரை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT