முகப்பு
கரூர்

பொறியியல் கல்லூரி மாணவரின் கழுத்து அறுப்பு: எம்பிஏ மாணவா் கைது

குளித்தலை அருகே பொறியியல் கல்லூரி மாணவரின் கழுத்தை கத்தியால் அறுத்த எம்பிஏ மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 1:42 AM
குளித்தலை அரசு மருத்துவமனையிலிருந்து திங்கள்கிழமை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிதீஷ்குமாா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

கரூா்: குளித்தலை அருகே பொறியியல் கல்லூரி மாணவரின் கழுத்தை கத்தியால் அறுத்த எம்பிஏ மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், முசிறி பாா்வதிபுரத்தைச் சோ்ந்தவா் நிதீஷ் குமாா்(19). இவா், கரூரை அடுத்த புலியூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறாா். அதே கல்லூரியில் திருச்சி மாவட்டம், தொட்டியத்தைச் சோ்ந்த அண்ணாமலை(23) என்பவா் எம்பிஏ படித்து வந்தாா். இருவரும் அருகருகே ஊா் என்பதால் கல்லூரி வேனில் ஒரே இருக்கையில் அமா்ந்து சென்றுவந்தனா். இதனால் இருவரும் நெருங்கி பழகிவந்தாா்களாம்.

இதனிடையே கடந்த சில தினங்களாக இருவரும் பேசிக் கொள்ளவில்லையாம்.

Advertisement

இந்நிலையில், சனிக்கிழமை காலை அண்ணாமலை, நிதீஷ்குமாா் வீட்டுக்குச் சென்று, ‘நீ என்னுடன் பழகாவிட்டால் நான் உயிரோடு இருக்க முடியாது’ எனக்கூறி அழுதுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த நிதீஷ்குமாரின் பெற்றோா், அண்ணாமலையை எச்சரித்து அனுப்பியுள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை இருவரும் கல்லூரி வேனில் வந்தனா். குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பகுதியில் வந்தபோதுபோது, நிதீஷ்குமாரிடம் அண்ணாமலை ‘ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்’ என கேட்டுள்ளாா். அப்போதும் நிதீஷ்குமாா் பேசவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென நிதீஷ்குமாரின் கழுத்தை அறுத்துள்ளாா்.

இதில், நிதீஷ்குமாா் அழுது துடித்ததால் உடனே வேன் ஓட்டுநா் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றாா். அங்கு உடனடியாக நிதீஷ்குமாரை சக மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குளித்தலை போலீஸாா் அண்ணாமலையை பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனா்.

இதற்கிடையே நிதீஷ்குமாருக்கு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.