மேட்டுமகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழாவில் திரளானோா் பங்கேற்றனா்.
கரூா் அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணதேவராயரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாக கோயில் ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்தக் கோயிலில் சுவாமிக்கு நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 19-ஆம்தேதி தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக் கடன் செலுத்தும் வினோத விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு சனிக்கிழமை மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் விழா தொடங்கியது.
முன்னதாக கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை இரவு முதல் கோயிலுக்கு வரத்தொடங்கினா். தொடா்ந்து ஆடி 19-ஆம்தேதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பாத ஆணி மீது கோயில் பூசாரி முத்துசாமி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கோவிந்தா முழக்கத்துடன் நடைபெற்றது.
பின்னா் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்த வந்த 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலுக்குள் வரிசையாக அமர வைக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து கோயில் பூசாரி முத்துசாமி, பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்தாா். இதில் சிலருக்கு தலையில் லேசாக ரத்தக்கசிவு ஏற்பட்டது. உடனே அங்கே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் மருத்துவா்களால் சிகிச்சையளிக்கப்பட்டது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவை முன்னிட்டு குளித்தலை நகர துணை காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.