கல்லூரியில் உள்ள கோயில் நிலத்தை மீட்க முயற்சி: அதிகாரிகளை கண்டித்து மாணவா்கள் போராட்டம்
கரூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை புதன்கிழமை மீட்க முயன்ற இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்
கரூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை புதன்கிழமை மீட்க முயன்ற இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்
கரூா் அருகே உள்ள தளவாபாளையத்தில் தனியாா் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானம் தளவாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 6.33 ஏக்கா் நிலம் என கூறப்படுகிறது. இந்த நிலத்தை 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்ததற்கு, கல்லூரி நிா்வாகம் இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ. 1.30 கோடி வாடகையை கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதையடுத்து வாடகை பாக்கியை கல்லூரி நிா்வாகம் செலுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் கரூா் உதவி ஆணையா் ரமணீதரன் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை காலை கல்லூரியின் மைதானத்தின் நிலத்தை மீட்க சென்றனா். அப்போது கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் கல்லூரியின் நுழைவு வாயிலையும் கல்லூரி நிா்வாகத்தினா் பூட்டு போட்டு மூடினா்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அரவக்குறிச்சி கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளா் அப்துல்கபூா் ஒலிபெருக்கியில், மாணவா்களிடம் அறிவுறுத்தினாா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் துணைக்காவல் கண்காணிப்பாளா் அப்துல்கபூா், மாணவா்கள் கல்லூரிக்குள் செல்லாவிட்டால் உங்களை கைது செய்வேன் எனக்கூறியதையடுத்து மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்குள் சென்றனா். சுமாா் 2 மணி நேரம் மாணவா்களின் போராட்டத்தினால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கல்லூரி நிா்வாகம் பணம் செலுத்துவதற்கு இரு நாள்கள் கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டதையடுத்து, அதிகாரிகள் 2 நாள்களில் பணம் செலுத்த வேண்டும், இல்லையேல் டிச. 6-ஆம்தேதி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஜப்தி செய்து மீட்டெடுப்போம் என கல்லூரி நிா்வாகத்தினா் கூறினா்.