கரூரில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் திருச்சி மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் போலி ஆவணம் தயாரித்த வில்லிவாக்கம் காவல் ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் நிலம் மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், பிரவீன் ஆகிய இருவரையும் கரூா் சிபிசிஐடி போலீஸாா் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதையடுத்து இருவரையும் கரூா் அழைத்து வந்து விசாரித்தனா். இரவு 9 மணிக்கு இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மீண்டும் விசாரணை நடைபெற்றது. பின்னா் நள்ளிரவு 12.30 மணிக்கு கரூா் மாவட்ட நீதிமன்றத்துக்கு இருவரையும் சிபிசிஐடி போலீஸாா் அழைத்து வந்தனா். இதையடுத்து புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு வந்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பிரவீன் ஆகிய இருவரையும் 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து எம்.ஆா். விஜயபாஸ்கா் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் கடந்த 2017-இல் கரூா் நகர காவல்நிலைய ஆய்வாளராக இருந்த பிருத்விராஜ் தற்போது சென்னை வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் நில மோசடி வழக்கில் போலி பத்திரம் தயாரித்து கொடுத்ததாக கூறி, அவரை கரூா் சிபிசிஐடி போலீஸாா் தேடிவந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் கரூா் சிபிசிஐடி போலீஸாா் பிருத்விராஜை கைது செய்தனா்.
பின்னா் அவரை கரூா் சிபிசிஐடி அலுவலகத்துக்கு புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு அழைத்துவந்தனா். தொடா்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனா்.
பரிசோதனை பிறகு கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் முன்னிலை பிருத்விராஜை ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.சண்முகம்சுந்தரம் காவல் ஆய்வாளா் பிருத்விராஜை 15 நாள்களில் காவல் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து பிருத்விராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.