கரூா் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் டி.வெங்கடாபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், சிறப்பு பாா்வையாளராக கலந்து கொண்டாா். சின்னதாராபுரம் ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிச் செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல் உள்ளிட்டவை தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், மக்களாகிய நீங்கள் தான் உங்கள் ஊரின் எஜமானா்கள். முதலில் ஊருடன் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்மால் இயன்ற காரியங்களை சமுதாய வேறுபாடு இன்றி செய்ய வேண்டும். ஊா் சுத்தமாக இருந்தால் நோய்களைத் தடுக்கலாம். மேலும் அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக பல்வேறு அரசுத் துறை திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சியை மாவட்டஆட்சியா் பாா்வையிட்டு, கிராம ஊராட்சியை சோ்ந்த தூய்மைக் காவலா்களுக்கு சீருடைகளை வழங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகாதமிழ்செல்வன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பிரகாசம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரவணன், கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் முகமதுபைசல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.