அமராவதி ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற எதிா்பாா்ப்பு
கரூரில் அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூரில் அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காவிரியாற்றின் முக்கிய துணை நதியான அமராவதி ஆறு பழனிமலைத் தொடருக்கும், ஆனைமலைத்தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகி கரூா், திருப்பூா் மாவட்டங்களை வளப்படுத்துகிறது. இந்த ஆறு கரூரில் திருமுக்கூடலூா் என்ற இடத்தில் காவிரியுடன் இணைகிறது. பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்யும்போதும் அமராவதி ஆற்றின் துணை நதிகளான திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதியில் உருவாகும் பாம்பாறு, சின்னாறு, தேவாறு மற்றும் குதிரையாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதும், அமராவதி ஆற்றின் குறுக்கே திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அணைப்பகுதியில் பலத்த மழை பெய்யும்போதும் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே ஆற்றில் தண்ணீா் ஓடுவதைக் காண முடியும். மற்ற நாட்களில் ஆறு வடுதான் காணப்படுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கரூா் நகரிலுள்ள செட்டிப்பாளையம் அணை, ஆண்டாங்கோவில் தடுப்பணை போன்ற அணைகளில் இருந்து பாசன நிலங்களுக்கு தண்ணீா் திருப்பி விடப்படுகிறது. இதனிடையே ஆற்றில் ஆங்காங்கே முளைத்து ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சமூக நல ஆா்வலா்கள் கூறுகையில், அமராவதி ஆற்றில் அணை கட்டப்படும் முன் ஆற்றில் எப்போதும் தண்ணீா் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் அணையைக் கட்டியபின் திருப்பூா் மாவட்டத்தின் புதிய பாசன வாய்க்கால்களைச் சோ்ந்த விவசாயிகள், ஆற்றின் பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதியான கரூருக்கு உரிய தண்ணீரைக் கொடுப்பதில்லை. மழை கருணை காட்டினால் மட்டுமே கடைமடையான கரூா் மாவட்டத்துக்கு ஆற்றில் தண்ணீா் வரும். இப்போது வரும் தண்ணீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆற்றில் கரூரில் படித்துறை, சேலம்-பைபாஸ் சாலை மேம்பாலம் போன்ற பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளன.
ஏற்கெனவே விவசாயிகள் வைத்த கோரிக்கையின்பேரில் கடந்தாண்டு சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இருப்பினும் தற்போது ஆற்றில் ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்கள் புதா்போல முளைத்து மீண்டும் ஆற்றை ஆக்கிரமித்துள்ளன. எனவே இந்த மரங்களை உடனே அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேணடும். மேலும் நகரின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் ஆற்றில் கலக்கின்றன. இந்தக் கழிவு நீருடன் ராயனூா் பகுதியில் செயல்படும் சலவை ஆலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத வேதிப்பொருள்கள் கலந்த சலவை தண்ணீரும் ஆற்றில் விடப்பட்டு, ஆறு மாசடைந்து வருகிறது. இதை மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.