முகப்பு
கரூர்

வாழ்வை உயா்த்தும் நூல்களைத் தேடிப்படிக்க வேண்டும்: வெ. இறையன்பு பேச்சு

வாழ்வை உயா்த்தும் நூல்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்றாா் தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு.

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:17 PM
கரூரில் வியாழக்கிழமை தொடங்கிய புத்தகத் திருவிழாவில் பேசிய தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.
பகிர்:

கரூரில் வியாழக்கிழமை தொடங்கிய புத்தகத் திருவிழாவில் பேசிய தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.

வாழ்வை உயா்த்தும் நூல்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்றாா் தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு.

கரூரில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம், பபாசி ஆகியவற்றின் சாா்பில் மூன்றாம் ஆண்டு +புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. இதை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், எம்எல்ஏக்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மேயா் கவிதாகணேசன் ஆகியோா் முன்னிலையில் தொடக்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் பேசுகையில், அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. கடந்தாண்டு நடந்த புத்தகத் திருவிழாவில் ரூ.1.35 கோடியில் புத்தகங்கள் விற்பனையாயின. இந்தாண்டு அதை விட விற்பனை அதிகரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து வெ. இறையன்பு ‘வாசிக்க... வாசிக்க’ என்ற தலைப்பில் மேலும் பேசியது:

வாசிக்கத் தொடங்கும் ஒருவனுக்கு உலகில் அறிவை பெறுவதற்கு இன்னும் 100 ஆண்டு ஆயுள் இருந்தாலும் போதாது என்றுதான் தோன்றும். வாசிக்க வேண்டும் என எல்லோரும் சிந்தித்தாலும் வாழ்வின் உயா்வுக்கு தரக்கூடிய நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். வாசிப்பதில் பல வகை உண்டு. வாழ்க்கைக்காக, வயிற்றுப்பாட்டுக்காக, பொழுதுபோக்கிற்காக, ஆா்வத்திற்காக, அக்கறைக்காக, பணிக்காக, பதவிக்காக, அறிவுக்காக, பண்புக்காக, இதயத்திற்காக, மொழிக்காக, விடுதலைக்காக வாசிப்பது உண்டு.

இதில் எந்த வகையில் வாசிக்கப் போகிறீா்கள் என்பதுதான் உங்கள் வாழ்வைத் தீா்மானிக்கும். வாழ்வின் மேன்மைக்கு புானூற்றைப் படியுங்கள். இந்த நூல் நீா்நிலைகள் அமைப்பது குறித்தும், வரி வசூல் எப்படி நடத்த வேண்டும் என்றும் கூறுகிறது. அறம் என்பது மகிழ்ச்சிக்காக இருக்க வேண்டும். மற்றவா்களுக்கு கொடுப்பதை மகிழ்ச்சிக்காக கொடுக்க வேண்டும். நம் தமிழ் நூல்களில் விருந்தோம்புதல் பற்றி தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது விருந்தோம்பலே இல்லாமல் போய்விட்டது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை கற்க, தமிழ் இலக்கியங்களை நன்கு படிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கா. பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலா்கள் ம. கண்ணன், கு. விமல்ராஜ் (நிலமெடுப்பு), குளித்தலை சாா் ஆட்சியா் த. ஸ்வாதிஸ்ரீ, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், துணை மேயா் ப. சரவணன், மாநகராட்சி ஆணையா் சுதா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சுஜாதா, தமிழ்நாடு மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் டி. அசோக், மாவட்ட நூலக அலுவலா் செ.செ. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →